திங்கள், 12 டிசம்பர், 2016

இளமை ஊஞ்சல்.

இளமை ஊஞ்சல்.

                        எனது விடலைப் பருவமது. விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து காதலெனும் காற்றால் தூக்கி பந்தாடப்பட்ட நேரம். ஆம் அறியாத வயது, புரியாத வயது, பருவமடைந்த பதினான்கு வயதிருக்கலாம் அப்போது.......

                        எனது எதிர் வீட்டில் முனுசாமி மாமா இருந்தார், அவரது தம்பி குடும்பம் திண்டிவனத்தில் இருந்தது. தம்பியின் மகள் தான் இச் சம்பவத்தின் கதாநாயகி. கதையின் நாயகனான என்னை காதல் வயப்படுதியவள். ஆம், அவள் விடுமுறையில் மட்டுமே பெரியப்பா வீடு வருவாள். அப்போதெல்லாம் என்னோடு விளையாடி எனக்கு மகிழ்ச்சி தருவாள். அவளோடு துள்ளி திரிந்த காலம் எனது விடலைப் பருவத்தின் பொற்காலமாக இருந்தது.

                         என் மனதை திருடிய கள்ளி, அவள் பெயரோ வள்ளி! வளையல்கள் நிறைந்த அவளின் கரங்கள் இசைப் பாடி என்னை எழுப்பும். அவள் குரல் மழலைக் குரல் போல இனிக்கும். அந்த பேசா மடந்தை  பேச்சுக்காக ஏங்கியவன் நான். ஆம் அவள் மடந்தையே!

                        பெண்ணின் பருவங்கள் ஏழு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண். இதில் அவளோ நான்காம் பருவம். பருவத்திற்கு மூன்று வருடம் என்றால், பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது பெண். பூப்படைவதற்கு முந்தைய காலமது.

                          என்னோடு அவள் பழகிய போது பூப்படைந்திருக்கவில்லை. அவளுக்கு ஊஞ்சல் ஆட அதிக விருப்பம், பம்பு செட்டில் முழுவதுமாக நனைந்து விளையாட ஆசை. இதை இரண்டையும் நிறைவேற்றித்தான் அவள் மனதில் இடம் பிடித்தேன். ஆம் நான் பூவரசு மரத்தில் ஊஞ்சல் கட்டி காத்திருந்தேன் விடுமுறை நாட்களில்...........

                           வள்ளி வரப் போறா ...... துள்ளி வரப் போறா ........ என்ற பாடல் வரிகளைத்தான் மனதோடு சேர்ந்து உதடுகளும் உச்சரிக்கும். அவளோடு சுற்றித்திரிந்த வயல் வெளிகள், வாய்க்கால்கள் இன்றும் அவள் பெயரை பாடிக் கொண்டிருக்கின்றன. அவள் என் வாழ்வில் வசந்தமாக வருவது இளவேனில் காலத்தில் தான்.

                            இந்த விடுமுறை இப்படியாக செல்ல, அடுத்த ஆண்டும் வந்தது, விடுமுறையும் வந்தது. அவளுக்காக பூவரசு மரத்தில் ஊஞ்சல் கட்டி காத்திருந்தேன். வள்ளி வந்திருந்தாள், கூடவே வயதுக்கும் வந்திருந்தாள். பாவாடை தாவணியில் பளிச்செனத் தெரிந்தாள். பூவரசு மரத்தில் ஊஞ்சலைக் கண்டவள், என் வீட்டின் மீது கண்களைச் சுழற்றினாள்.. திண்ணையில் நானும் என் தங்கையும் அமர்ந்திருக்க, என்னோடு பேச வெட்கப்பட்டு  என் தங்கையை அழைத்தால் விளையாட......

                            அவள் விளையாட என்னையும் அழைப்பாள் என ஏங்க, அது நடக்காமலேயே போனது, என்னோடு பேச தயங்கிய அவள், எனது தங்கையிடம் எனது நலன் விசாரித்தாள். நான் கட்டிய ஊஞ்சலில் ஆடியவள் இன்று இளமையின் ஊஞ்சலில் ஆடுகிறாள் என தெரிந்து கொண்டேன். அந்த விடுமுறைக்கு கண்களால் பேசிச் சென்றவள் தான், இப்போது கல்யாணம் முடித்திருந்தாள். அவளுக்காக நான் கட்டிய ஊஞ்சல் மனதில் இன்றும் ஆடத் தான் செய்கிறது.

நட்புடன்,
கவிகஜா.                                                                       அழகிய நிலாக்காலம் தொடரும்.
                           

புதன், 7 டிசம்பர், 2016

செல்லத் தோழி செல்வி.

செல்லத் தோழி செல்வி.

                 நான் எனது கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த காலம். அப்போது மூன்றாம் வகுப்பில் புதியதாக ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அழகு தேவதை போல தோற்றமளித்தாள். பாவாடை சட்டையில் பளிச்சென தெரிந்தாள்.அவள் தோப்புதெரு துரைசாமியின் மகள் என தெரிய வந்தது.

                   நான் வசித்ததோ மாரியம்மன் கோயில் தெரு, நான் தோப்பு தெருவிற்கு சென்றதே இல்லை. ஆனால் அவள் வருகைக்கு பின் அடிக்கடி செல்லலானேன் அவளை தரிசனம் செய்ய.ஏனெனில் அவள் தான் தேவதை ஆயிற்றே.
         
                      தேவதையின் பெயர் செல்வி!.இரண்டாம் வகுப்பு வரை சென்னையில் ஆங்கிலம் வழி கல்வி பயின்றவள். துடுக்கனாவள்,செல்வ செழிப்போடு வளர்ந்தவள். ஏதோ குடும்ப பிரச்சனை காரணமாக சொந்த கிராமத்துக்கே வந்து ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தாள்.

                       அவள் பள்ளியில் சேர்ந்த முதல் நாளை அடுத்த மறுநாளில் காலை ௮.௩௦ மணி இருக்கும் பள்ளியின் வாசலில் படிக்கட்டுகள் உண்டு, அதன் மீது  ருக்மணியோடு அமர்ந்திருந்தாள். நான் தான் அனைத்து வகுப்பிற்குமான மாணவ தலைவன். கதவு திறக்க, பள்ளி முடிந்ததும் மூட எப்போதும் என்னிடம் ஒரு சாவி இருக்கும். நேரமானதால் கதவு திறக்க வந்தேன், ஆனால் வழியே இல்லாமல் ருக்மணியோடு அவள் அமர்ந்திருந்தாள்.

                       ருக்மணி! அவளைப் பற்றி சில வரிகள் கூறியே தீர வேண்டும்.அவள் எனது ஊரை சேர்ந்தவள், அவளின் ஆயா ஒருத்தி இருந்தாள், அவளின் பெயர் என் நினைவிலிருந்து நீங்கி விட்டது. ஒரு முறை எனது தங்கை வேதா உடல் நலமின்றி போக மாட்டு கறி கொண்டு வந்து கொடுத்து உடம்பை தேற்றியவள். அது என்னவோ தெரியவில்லை புதியதாய் வந்த செல்விக்கு அவளை பிடித்திருந்தது போலும், ருக்மணியை தோழியாக ஏற்றுக்கொண்டாள்.

                       நான் மாணவத் தலைவன் என்பதால் ருக்மணி பயந்து விலக, செல்வியோ நான் யாரென தெரியாமல், வழி விடாதே ருக்கு ஏன் எழுந்திருக்கிறாய் உட்கார் என சொல்ல, ருக்மணியோ, பயந்து எழ, தொடர்ந்து அவளை செல்வி அமர்த்த,பிறகு வழி விடுங்கள் கதவு திறக்க வேண்டுமென கோபமாக அவர்களை அங்கிருந்து எழுப்ப,இப்படியாக எண்களின் முதல் சந்திப்பு கோப தாண்டவத்தில் ஆரம்பித்தது.

                      நாட்கள் நகர நகர,என்னைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவள், பிறகு பரிவாய் அன்போடு பழகினால். அரிசி கொடுப்பாள், மணிலா பயறு, வருத்த கோதுமை, உளுந்து கொடுப்பாள். ஓராண்டு மட்டுமே அவளோடு தொடர்ந்தது நட்பு. நான் ஆறாம் வகுப்பு ஆவணிப்பூருக்கு சென்று படிக்கும் கட்டாயம் ஏற்பட, அவளை பார்க்க முடியாமல் துடித்தன கண்கள்,பேச முடியாமல் தவித்தன இதழ்கள். இப்படியே நாட்கள் செல்ல அவளை நிரந்தரமாய் பிரிந்த நான் வெகு தூரம் சென்று விட்டேன்.

                        எப்போதாவது அவளைப் பார்க்க நேரிடும். அவள் பார்க்கும் பரிவு பார்வை ஆறுதலை தரும். ஆனாலும் வெறுமையோ குடிகொண்டது.வெகு நாட்களுக்குப் பிறகு அவளை திண்டிவனத்தில் சந்தித்தேன்,அப்போது அவளுக்கு திருமணமாகி இருந்தது. அவளோடு அவளின் குழந்தையும், அவளின் தங்கை ஜெயந்தியும் திருவிழாவிற்கு சேந்தமங்கலம் செல்ல பயணப் பட, அவளுக்காக நான் பிடித்த இருக்கையை மட்டுமே விட்டு தர முடிந்தது.

                          குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்க முடியாமல் நிற்பது எனது தோழி செல்வியாக இருந்தாலும், அவள் இப்போது திருமதி. எனவே அதிகம் பேசாமல் புன்முறுவல் செய்ய பதிலுக்கு அவளும் நன்றி தெரிவிக்க பயணப் பட்டோம் இருவரும் பழைய நினைவுகளுக்கு......

                          ஊர் வந்ததும் இறங்கி அவள் வீடு செல்ல, பிரிய மனமில்லாமல் நானும் எனது வீடு வந்தேன். இது காலத்தின் கோலம் ..........என் மனதிற்கு வலிமை தந்த பாலம்............

நட்புடன்,
கவிகஜா.                                                                         அழகிய நிலாக்காலம் தொடரும்.


வெள்ளி, 18 நவம்பர், 2016

சென்னை தோழி செல்வி.

 சென்னை  தோழி செல்வி.
                            நான் நான்காம் வகுப்பு படித்து முடித்த விடுமுறை காலம் அது. அப்போதெல்லாம் விடுமுறை என்றால் உறவினர்களின் வீட்டுக்கு செல்வது பெருமகிழ்ச்சி அளிக்கும்.அதுமட்டுமின்றி கிணற்றிலே குளிப்பது,மணலிலே விளையாடுவது, காற்றாடி விடுவது,ஏரி,குளங்களில் மீன் பிடித்து விளையாடுவதெல்லாம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்கவல்லது.

                             அந்த விடுமுறை வித்தியாசமாக சென்னையில் உள்ள மாம்பலத்தில் கழிக்கலாயிற்று. ஆம் அப்போது எனது மூத்த சகோதரன் மாம்பலத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.     அப்போது சமையல் செய்ய வீட்டை பார்த்துக்கொள்ள எனது சகோதரி சொர்ணம் அங்கே இருந்தாள். என்னை விட மூன்று வயது மூத்தவளாயினும்,  இப்போதும் பெயரிட்டே அழைப்பேன்.

                               அண்ணனின் வாடகை வீடு மாடியில் இருந்தது.எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது,அப்போது பார்த்திபனின் முதல் இயக்கமான "புதிய பாதை" திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய காலமது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்க்கவே அரிது. இருப்பினும் மனம் ஆசைப்படும். நகரத்திற்கு சென்ற எனக்கு அந்த ஆசை மேலோங்கி நின்றது. ஆனால் அண்ணனிடம் தொலைக்காட்சி பெட்டி இல்லை.எதிர்த்த வீட்டில் தான் சொர்ணமே சென்று பார்க்கும்.

                                 எதிர்த்த வீடு, தொலைக்காட்சி பெட்டி இருக்கும் வீடு,ஆம் அது செல்வியின் வீடு.அவர்கள் வீட்டில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியாக இருந்தாலும் கண்டிப்பானவர்கள் அல்ல, அண்ணன்    அக்காவோடு அன்பாக பழகும் குடும்பமே!

                                  செல்வி! எத்தனை அழகான பெயர். பெயருக்கேற்றார் போல்  அழகாகவே இருந்தாள். என்னை விட ஓரிரு வயது இளையவாளாக இருப்பாள்,இனிமையாக பேசுவாள்.என் வீட்டிற்கு வந்து என்னை அடிக்கடி விளையாட அழைப்பாள். ஏனென்றால் அவளுக்கும் பள்ளி விடுமுறையே!

                                  அவளோடு சேர்ந்து விளையாடும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கும். புதிய புதிய விளையாட்டுகள், புதிர் போட்டிகள்,பட்டம் விடுதல் போன்றவற்றில் இருவரும் நாட்களை மகிழ்வோடு கழித்தோம். அக்காவும் நானும்  மாலை வேளைகளில் அவர்கள் வீட்டில் அமர்ந்துதான் ஒளியும் ஒலியும்,திரைப்படம் பார்ப்போம். அப்போதெல்லாம் அவள் எனதருகில் வந்து அமர்ந்து பார்ப்பாள்.அவளுக்கு அதில் சந்தோசமே! ஆனால் அந்த சந்தோசம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவே இல்லை.

                                   விடுமுறை முடிந்தது. அண்ணனும் வீடு காலி செய்தார். அண்ணன் அக்காவோடு நானும் வீடு வந்து சேர, விழி பார்க்க முடியாமல் தவித்தேன்.நான் அவளை பிரிந்த அந்த மாலை பொழுதை எனது வாழ்வில் ஒரு அஸ்தமனமாகத்தான் கருதுகிறேன்.

                                                                                             அழகிய நிலாக்காலம் தொடரும்.

நட்புடன்,
கவிகஜா. 
                 

                       

                       

சனி, 12 நவம்பர், 2016

அன்பு தங்கைக்காக ........

             அன்பு தங்கை அமுதா.
                            எனக்கு தெரிந்து அப்போது ஆறு வயதிருக்கும் எனக்கு, என் எதிர் வீட்டில் பூத்த அனிச்ச மலர் தான் அமுதா!..... அவள் பெயருக்கு ஏற்றார் போல் அமுதமானவள். எனது எதிர்வீட்டு தாத்தா வரதராஜ பாரதியாரின் பேத்தி , சாவித்திரி சித்தியின் மகள், என்னை விட இரண்டு வயது இளையவள்.தங்கை முறையான தங்க தாரகை அவள்.
                            எனக்கு நினைவு தெரிந்து அப்போது அவளுடன் அதிகமாக விளையாடிய விளையாட்டு கண்ணாமூச்சி மட்டுமே. என்னை விட்டு எப்போதும் அகலாதவள் என் அமுதா!...
                             நாங்கள் கண்ணாமூச்சி விளையாடும் போதுஆண்டாள் தான் அனைவரின் கண்களை மூடுவாள். ஆண்டாளை பற்றி சில வரிகள்... ஆண்டாள் அக்கா முறையானவள், என்னை விட இரண்டு வருடம் மூத்தவள், பாரதியாரின் பேத்தி, ருக்மணி சித்தியின் மகள், எல்லோரும் ஒளிந்து கொண்ட பின்பு மூடிய கண்களை திறப்பாள்.பிறகு அங்கும் இங்குமாக அலைந்து தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
                              அப்படி விளையாடுகையில் அமுதாவின் கண்களை மூடும் போது அனைவரும் ஓடி ஒளிய நான் மட்டும் அவள் கண்களில் படும்படியாக ஒளிந்திருப்பேன்.அடிக்கடி அகப்பட்டும் கொள்வேன்.அதில் ஆனந்தபட்டும் கொள்வேன்.அதே போல எனது கண்களை ஆண்டாள் மூடும் வேளைகளில் அமுதாவும் இதையே தான் செய்வாள்.அந்த நினைவு தெரியாத காலத்தில் கூட என் மனம் நோகாமல் விட்டு கொடுத்தவள் அவள்.அதனால் தான் என்னவோ வெகுவிரைவில் என்னைவிட்டு பிரிய நேரிட்டது.ஆம் அவர்கள் குடும்பத்தோடு சென்னை பாலவாக்கம் குடியேறிச் சென்றனர்.
                                நாட்கள் நகர்ந்தன,,, பள்ளி விடுமுறை காலங்களில் எப்போதாவது வருவாள்.அப்போது அவளை பார்க்கவும் பேசவும் முடியும். பல ஆண்டுகளுக்கு பிறகு பாரதியார் தாத்தா மரணத்தின் போது வந்திருந்தாள்.  அப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள்.அந்த சோக நிகழ்வில் அதிகமாக பேச இயல்லாமற் போனது.இருப்பினும் பாசத்தோடு அவள் "அண்ணா எப்படி இருக்கிறாய் ?" என நலன் விசாரிக்க பரிதவித்து போனேன் நான்.......
                                  இப்படி பட்ட தங்கை எனக்கு மீண்டு கிடைப்பாளா ?  அடுத்த ஜென்மத்திலாவது............................

நட்புடன்,
கவிகஜா.
                                                                                        2. அழகிய நிலாக்காலம் தொடரும்.

திங்கள், 27 ஜனவரி, 2014

என் இனிய இந்திராணி

என்  இனிய  இந்திராணி.


                நான் சிறுவனாக  இருந்த காலம் , அப்போது அவனுக்கு வயது ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். இந்திராணி அவள் பெயர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் முதலில் எனக்கு  நினைவு தெரிய ஆரம்பித்த அந்த நாளில் ஒரு உன்னத தோழியாய் உயிரோடு உறவாடியவள் இந்திராணி. பெயரளவில் மட்டுமே அவள் இந்திராணியாக இருந்தாள். எனக்கு  அவள் மீது ஏற்பட்ட இரக்கமே நட்பாக மாறிப்போனது.அவளும் நானும் ஒன்றாக உணவருந்தும் அளவிற்கு ஒன்றிப்போனோம்.அவளும் மனம் மகிழ்ந்து என்னோடு சுற்றி திரிந்தாள்.

               நாட்கள் நகர்ந்தன ......எனது  நண்பர்கள் அனைவரும் அவளை அடியோடு வெறுத்தனர்.விளையாட்டில் சேர்க்க மறுத்தனர்.  அப்படிப்பட்ட தருணங்களில் அவளின் மனதோடு உறவாடி மணலோடு விளையாடிவன் தான் இந்த கஜா.இன்று அவள் பெங்களூரில் ஏதோ ஒரு இடத்தில இருப்பதாக கேள்வி பட்டேன் . நான்கு குழந்தைகளுக்கு தாயாகி நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிந்தேன்.அவளின் நிலையறிந்து என் மனம் வருந்த அவளின் விலாசம் அறிய முற்பட்டேன்.
               தேடுதலின் பலனாக, சில நாட்களுக்கு முன்பாக . அவளின் பெண்ணை சந்தித்தேன். அவளிடம் என் இனிய தோழி இந்திராணி பற்றி விசாரித்தேன். அவள் இன்னமும் பெங்களூரில் இருப்பதாகவும், இவளோ இவளின் மாமன் மகனை திருமணம் செய்து கொண்டு இங்கே தங்கி இருப்பதாகவும்  கூறினாள்.பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் எனது தோழிக்காக சில உதவிகளை அவளின் மகளின் மூலமாக செய்யும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு ஓரளவிற்கு மகிழ்ச்சியே!....என் இனியவள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...............

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அறிமுகம்

அன்பு நண்பர்களே,
                                             உங்களுக்கு எனது  முதற்கண் வணக்கம். நான் புதியதாக ஆரம்பித்துள்ள இந்த வலை பதிவிற்கு பேராதரவு தர வேண்டுகிறேன். எனது பதிவுகளின் மூலமாக கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் படித்து மகிழலாம்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


இப்படிக்கு,

கவிகஜா